மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி கடந்த இரண்டு மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது.
இத்தகைய பதற்றமான சூழலில், மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மணிப்பூரில், பெரும்பான்மை மைதேயி, குகி நாகா இன மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் சட்டத்தின் கீழ் ஒன்றாக வாழ வேண்டும்.
ஒவ்வொரு இனத்தவருக்கும் மற்றொரு பிரிவினர் மீது குறைகள் இருக்கலாம். யார் சரி அல்லது தவறு என்பதைப் பொருட்படுத்தாமல், மூன்று குழுக்களும் ஒவ்வொரும் பேசி தீர்வு காண ஒரு சமூக மற்றும் அரசியல் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும்.
அனைத்து பிரிவினரும் பழி போடுவதை நிறுத்திவிட்டு வன்முறையை நிறுத்த உறுதி எடுக்க வேண்டும்.
வன்முறையால், அனைத்து தரப்பினரும் விலைமதிப்பற்ற பல உயிர்களை இழந்துள்ளனர் மற்றும் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மைதேயி மற்றும் குகி மக்கள் இடையே வன்முறையை நிறுத்ததப்பட்டு, ஒருவருக்கொருவர் பேசுவதற்கு முன்வருவதற்கு, அங்கு நடுநிலையான நிர்வாகம் இருக்க வேண்டும்.
அதனால்தான் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.