பொன்னியின் செல்வனுக்கு பிறகு மாஸ் ஹீரோவுடன் மணிரத்னம் கூட்டணி!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற ஒருசில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் மணிரத்னம். காட்சி அமைப்பு, திரைக்கதை அமைப்பு, வசனங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் புதுமையை கொண்டு வந்திருக்கிறார். பலரும் பாகுபலி படத்தை பிரம்மித்து பார்த்திருந்த நிலையில், பொன்னியின் செல்வன் என்ற சிறப்பான படத்தை கொடுத்துள்ளார்.

பல்வேறு வசூல் சாதனைகளையும் அந்த திரைப்படம் செய்து வருகிறது. இந்த படத்தின் இரண்டு பாகங்களையும் முடித்த பிறகு, மணிரத்னம் யாருடன் கூட்டணி வைப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, மணிரத்னம் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனத்திற்காக இரண்டு படங்களில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் ஒரு படத்தை தான் மணிரத்னம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள், இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.