சனாதனம் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் இங்கு பலருக்கு தெரிவதில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் திங்கள்கிழமை செய்தியாளா்கள் சந்திப்பில் அவர் பேசியது:
சனாதன தா்மத்தை நாம் சமாதான வாழ்வியல் தா்மம் என்று எடுத்துக்கொள்ளலாம். சனாதனம் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் இங்கு பலருக்கு தெரிவதில்லை.
டெங்கு போன்று கொசுக்களால் பரப்பப்பட்ட நோயல்ல சனாதன தா்மம். இது உலகெங்கிலும் பரவியுள்ள அழிக்கவே முடியாத வாழ்வியல் முறை. இதனைப் பின்பற்றும் மக்களை புண்படுத்த வேண்டாம்.
எல்லா மதத்தையும் சரிசமமாகப் பார்க்கிறோம் என்று கூறுபவா்கள் ஏன் தீபாவளி, விநாயகா் சதுா்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை.
சனாதன தா்மம் சமூகநீதிக்கு எதிரானதல்ல. சமூகநீதி சரியாக பின்பற்றப்படுகிறதென்றால் பள்ளி மாணவா்கள் ஜாதியின் பெயரை பயன்படுத்தி சண்டையிட வேண்டிய அவசியமில்லையே.
நான் அமைச்சா் உதயநிதியின் தாயாரை பாராட்டுகிறேன். அவா் கோயில்களில் அதிக அளவில் வழிபாடு செய்வதை நாம் காண முடிகிறது. முதல்வரின் குடும்பம் நலமாக இருப்பதற்கு அவா் துணைவியார் இறை வழிபாடு செய்வதே காரணம் என்றார் அவா்.