அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட, ‘டிஜிட்டல்’ ஊடகங்கள், ‘ஆன்லைன்’ சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட வேண்டாம் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை:
‘பெட்டிங்’ மற்றும் சூதாட்டங்கள் நம் நாட்டில் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை வெளியிடுவது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.
எனவே அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட, ‘டிஜிட்டல்’ ஊடகங்கள், ‘ஆன்லைன்’ சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது போன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் முகவர்கள் சிலர், பயனாளர்களிடம் பெரும் தொகையை வசூலித்து, அதை வெளிநாடுகளுக்கு அனுப்பியது சமீபத்தில் அரசின் கவனத்துக்கு வந்தது.
எனவே, இது போன்ற ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகள், தனிப்பட்ட நபர்களின் பொருளாதார நிலையை சீர்குலைப்பதுடன், சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக திகழ்கிறது.
கிரிக்கெட் உள்ளிட்ட பிரபலமான விளையாட்டு போட்டிகள் நடக்கும் போது, ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன. இது கருப்பு பண புழக்கத்தையும் அதிகரிக்கின்றன.
எனவே, இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதை ஊடகங்கள் உடனடியாக தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.