மெடிக்கல் ஷாப் உரிமையாளர் நோயாளிக்கு ஊசி போட்டதில் பலி!

மெடிக்கல் ஷாப் உரிமையாளர் நோயாளிக்கு ஊசி போட்டதில், திடீரென மயங்கி விழுந்து பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர், இந்திராணி, 47, இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஹோட்டலில், பாத்திரம் கழுவும் பணியாளராக பணிபுரிந்த வந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, காயத்திற்கு கட்டு போட்டு கொண்டு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை காயம் ஏற்பட்ட இடத்தில் கடும் வலியாக இருந்ததால், ஊசாம்பாடி அடுத்த புது மல்லவாடி கிராமத்தில் உள்ள சரவணா மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, கடை உரிமையாளர் சரவணனிடம் கால் வலிப்பதாக கூறினார். அவர் காயத்திற்காக கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து பார்த்தபோது, காயம் சரியாகாமல் ரணமாக இருந்தது. அப்போது சரவணன், ஊசி போட்டு மருந்து கொடுக்கிறேன் என கூறி, ஊசி போட்டார். அப்போது, சிறிது நேரத்திலேயே, இந்திராணி மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருந்து கடை உரிமையாளர் சரவணனை தேடி வருகின்றனர். மேலும், மருந்து கடைக்கு சீல் வைத்தனர்.

RELATED ARTICLES

Recent News