பிரபல ஓடிடி தளத்தில், ஷார்க் டேங்க் இந்தியா என்ற நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இளம் தொழில் அதிபர்கள், தங்களது புதுவிதமான வணிக ஐடியாக்களை கொடுத்து, முதலீட்டாளர்களை கவருவது தான், இந்த நிகழ்ச்சியின் மைய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் 3-வது சீசனில் இளம்பெண் ஒருவர் கலந்துக் கொண்டு பலரையும், ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதாவது, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் ஷெல்லி புல்சந்தனி.
தகவல் தொழில்நுட்ப பிரிவில், இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டம் பயின்று வரும் இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு, தனது 20 வயதில், தி ஷெல் ஏர் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான, Fashion-ஆன ஜவுரி முடிகள், விக் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த நிறுவனம், 2 ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன் தான் தொடங்கியதாம். இன்னும் விரிவாக சொல்வதாக இருந்தால், ஜெய்பூரில் உள்ள வியாபாரி ஒருவரிடம் இருந்து, ரூபாய் 2 ஆயிரம் மதிப்பில், முடிகளை வாங்கிய இவர், தற்போது 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்துக்கு உரிமையாளராக வளர்ந்துள்ளார்.
படிப்பையும், பிசினஸையும் சமநிலையுடன் கையாண்ட ஷெல்லி, தனது தனித்துவமான மற்றும் தரமான பொருட்கள் மூலம், இந்தியா முழுவதும் உள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மார்கெட்டுகளில், பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இந்த நிறுவனத்தின் பொருட்கள், தங்களது போட்டி நிறுவனங்களை காட்டிலும், 30-ல் இருந்து 40 சதவீதம் குறைவான விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு படிப்படியாக வளர்ந்த ஷெல்லி, தற்போது ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், என்னுடைய ஸ்டார்ட் – அப் நிறுவனத்துக்கு, 10 கோடி ரூபாய் வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும், 30 லட்சம் ரூபாய் நிதி கொடுப்பதாக இருந்தால், தனது நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை கொடுக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவரது கதையை கேட்டு திகைத்துப் போன தொழில் அதிபர் அமன் குப்தா, ஷெல்லி கேட்ட பணத்தை கொடுப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளார். முதலில் 30 லட்சம் ரூபாய்-க்கு, 5 சதவீத பங்குகள் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்த அமன் குப்தா, அதன்பிறகு, ஷெல்லியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார்.
இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சாதனைகள் படைத்துள்ள ஷெல்லி, பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.