பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் வழங்காமல், காலம் தாழ்த்தி வந்தார். இதனால், தமிழக அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பு தொடர்பான விவரங்கள், உச்சநீதின்றத்தின் வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு, ஆளுநர் 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும்.
குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், 90 நாட்களுக்குள் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், மசோதாவை நிரகாரிக்கும் அதிகாரம், ஆளுநருக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல், குடியரசு தலைவருக்கும் அந்த தீர்ப்பில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆளுநர் அனுப்பி வைத்த மாநில அரசின் தீர்மானங்களுக்கு, 3 மாதங்களுக்குள் குடிரயசு தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.
மேலும், மாநில அரசு அனுப்பும் மசோதாக்கள், ஜனநாயகத்திற்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு முரணாகவும் இருந்தால், சுப்ரீம் கோர்ட்டின் கருத்தை கேட்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பயன்படுத்தலாம் என்றும், அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.