தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில், மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது.
இதனால், பெரும்பாலான பகுதிகளில், வெள்ளம் தேங்கி, பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவித்தனர்.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பெரும்பாலான பகுதிகளில், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
தமிழக அரசின் இந்த நிவாரண பணிகளுக்கு, பல்வேறு தரப்பினர் தங்களால் முயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பட நடிகர் – சகோதரர் விஷ்னு விஷால், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார்.
அவருக்கு என் அன்பும் நன்றியும்.’ என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் நிதி உதவி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.