முடங்கிய மைக்ரோசாஃப்ட்: விமான சோவை பாதிப்பு!

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட அனைத்து சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மென்பொருள் செயலிழந்ததால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் இணையதள சேவை இன்று (ஜூலை 19) பகல் 12 மணியில் இருந்து திடீரென முடங்கியது. இணையதளம் சரியாக வேலை செய்யாமல், மிகவும் தாமதமாக செயல்பட்டதால், விமான பயன்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதை அடுத்து விமான நிறுவனங்கள், கவுண்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமித்து, போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதிக் கொடுத்தனர். இதனால் ஒவ்வொரு பயணிக்கும் போர்டிங் பாஸ் கொடுப்பதற்கு தாமதம் ஆகியதால், பயணிகள் விமானங்களில் ஏறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து மும்பை, லக்னோ, பெங்களூர், மதுரை, திருவனந்தபுரம், பாட்னா, சிலிகுரி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள், சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

இதனால் பயணிகள் அதுவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால் விமானங்கள் திடீர் தாமதங்களுக்கு என்ன காரணம்? எப்போது நிலைமை சீராகும் என்று பயணிகளுக்கு, விமான நிறுவனங்கள் முறையான அறிவிப்புகள் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் திடீரென ஏற்பட்டுள்ள இந்த இணையதள தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் பணிகளில் பொறியாளர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஓரிரு மணி நேரங்களில், இணையதள கோளாறு முழுமையாக சீரமைக்கப்பட்டு விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

RELATED ARTICLES

Recent News