கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 4-ஆம் வகுப்பு மாணவியிடம், பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இருக்க, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, அவர்களின் கல்விச் சான்றுகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.