பிரதமர் மோடியை கலாய்த்த அமைச்சர்கள்: 7,500 ஓட்டல்கள், 2300 விமான டிக்கெட்களை ரத்து செய்த இந்திய சுற்றுலாப் பயணிகள்; என்ன நடந்தது?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2,3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள், வீடியோகளை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி.

சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோகள், பதிவுகள் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதன் விளைவாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி இருந்த மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.

பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்த நாட்டின் தலைவர்கள் சிலர் வலைதள பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சை கருத்து:

மாலத்தீவு அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார். மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மாலத்தீவின் இளைஞர் நலன், தகவல், கலை துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்தார். பிரதமர் மோடியை மோசமாகவும் இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் அநாகரிகமாக அவர் விமர்சனம் செய்தார். மாலத்தீவு இளைஞர் நலத் துறை இணையமைச்சர் மால்ஷா ஷெரீப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மோடி முர்தாபாத்’ என்று மோசமாக விமர்சித்து இருந்தார்.

மாலத்தீவின் ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ், இந்தியர்களை கேலி செய்யும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்துகளை தெரிவித்தார். “சுற்றுலா துறையில் எங்களுடன் இந்தியா போட்டி போடுவது ஒரு மாயை. நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா? இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா? இந்திய சுற்றுலா நகர அறைகளின் தூர்நாற்றம் ஒன்றே, சுற்றுலா துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்” என்று ஜாகித் ரமீஸ் விமர்சித்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு இந்தியர்கள் கொந்தளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்கள், இந்தியாவை அவதூறாக விமர்சித்த மாலத்தீவை புறக்கணியுங்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இதை ஏற்ற இந்திய சுற்றுலா பயணிகள் நேற்று ஒரே நாளில் மாலத்தீவு ஓட்டல்களில் 7,500 முன்பதிவுகளையும், 2,300 மாலத்தீவு செல்லும் விமானங்களில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்தனர்.

RELATED ARTICLES

Recent News