பாதுகாப்பு அமைச்சகம் ரூ.7,800 கோடியில் ஆயுத கொள்முதல் செய்ய ஒப்புதல்!

பாதுகாப்பு அமைச்சகம் ரூ. 7,800 கோடி மதிப்பிலான ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு (டிஏசி) இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரூ. 7,800 கோடி மதிப்பிலான ஆயுதக் கொள்முதல் பரிந்துரை தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் தலைமையில் டிஏசி கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்திய விமானப் படையின் திறனை மேம்படுத்தும் விதமாக, எம்ஐ-17 வி5 ஹெலிகாப்டரின் பயணிக்கும் வீரா்களுக்கான உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்திசெய்யப்பட்ட மின்னணு போர்க் கவச உடைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, பெல் (பாரத் மின்னணு நிறுவனம்) நிறுவனத்திடமிருந்து இந்த (இ.டபிள்யூ) உடை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்திய கடற்படையின் எம்ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா கண்காணிப்பு மற்றும் வெடிபொருள்கள், எரிபொருள், உதிரிபாகங்கள் எடுத்துச் செல்வதற்கும், அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கும் உதவும் வகையில் போர் வாகனங்கள் மற்றும் பீரங்கிகளை கொள்முதல் செய்ய டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், காலாட்படையின் திறனை விரிவுபடுத்தும் வகையில் இலகுரக இயந்திர துப்பாக்கி, தற்காலிக பாலமாக செயல்படும் பாதுகாப்பு வாகனம் கொள்முதல் செய்யவும், சக்தி திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்துக்கு கடின பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள் கொள்முதல் செய்யவும் டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

இவை அனைத்தும் உள்நாட்டு உற்பத்தியாளா்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News