வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு இவர் பெருமுகை பகுதியில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார்.
ஏரியூர் பகுதியில் உள்ள கோவில் நேற்று காலை திருவிழா நடந்துள்ளது. அப்போது அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரவில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவின்போதும் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சந்துரு தான் காரணம் என கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டி விட்டு பின்னர் அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர் இதில் தொடர்புடைய நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.