சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் வசித்து பெரும் பொதுமக்களுக்கு, தீப் பெட்டி தொழில்தான் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து லைட்டர்கள் இறக்குமதி செய்வதால், இவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த லைட்டர்களை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, இந்த லைட்டர்கள் இறக்குமதி செய்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். பின்னர், இந்த விஷயம், மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்பட்டு,ரூ.20-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் லைட்டர்கள் இறக்குமதிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சிவகாசி மக்களுக்காக நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும், சிவகாசி தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தர வேண்டும் என்று தமிழக அரசிடம் அவர் கோரிக்கையும் வைத்துள்ளார்.