அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சத்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் அதானி விவகாரத்தை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் “மோடியும் அதானியும் ஒன்று” என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பேசிய ராகுல் காந்தி, “அதானி மீது விசாரணை நடத்த பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். ஏனெனில், அதானி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் பிறகு தானும் விசாரணைக்கு உட்பட வேண்டியது இருக்கும் என்பது அவருக்குத் தெரியும்.” என விமர்சித்தார்.