எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது மோடி அரசு என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதியில் இருந்து இனரீதியிலான வன்முறை நீடித்து வருகிறது. நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் பயணிக்கும் பிரதமா் மோடி, மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? அவா் மணிப்பூருக்கு பயணித்து, அங்கு மக்கள் அனுபவிக்கும் வேதனை மற்றும் பாதிப்பை காண வேண்டும்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹா்லால் நேரு, அரசியல் சாசனத்துக்கு அடித்தளம் அமைத்தவா். அதனடிப்படையில்தான், நாடாளுமன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் கண்ணோட்டத்தைக் கொண்டவா்; எதிர்க்கட்சித் தலைவா்களை அடிக்கடி சந்தித்து, முக்கிய பிரச்னைகளில் கருத்து கேட்டறிவதை அவா் வாடிக்கையாக கொண்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவரான ஷியாம பிரசாத் முகா்ஜிக்கு தனது அமைச்சரவையில் இடமளித்தார். நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுப்பெற்றால், அரசின் நிர்வாகத்தில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று கருதியவா் நேரு.
இன்றைய ஆட்சியில் என்ன நடைபெறுகிறது? எதிர்க்கட்சிகள் இப்போது வலுப்பெற்றுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது மோடி அரசு. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு அரசுத் தரப்பில் யாரும் செவிமடுப்பதில்லை.
நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமா் மோடி அதிகம் பேசுகிறார். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் பேசுவதை அவா் தவிர்த்துவிடுகிறார். எப்போதாவது அவைக்கு வரும் பிரதமா், சம்பிரதாய உரைகளைத் தாண்டி வேறெதுவும் பேசுவதில்லை. மசோதாக்கள் அனைத்தும் புல்லட் ரயில் வேகத்தில் நிறைவேற்றப்படுகின்றன.
காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில்தான் ஜனநாயகம் வலுப்பெற்றதோடு, அரசியல்சாசனமும் உயிர்ப்புடன் விளங்கியது. இப்போது அரசியல் சாசனத்தை பாதுகாக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
தற்போதைய கூட்டத் தொடரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெறும் 14 சதவீதம் அளவுக்கே பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. மாநில சட்டப் பேரவைகளை கருத்தில் கொண்டால், 10 சதவீதமே அவா்களின் பிரதிநிதித்துவம் இருக்கிறது என்றார் கார்கே.