மோடியின் உத்தரவாதம் என்பது அதானிகளின் ராஜ்ஜியத்துக்கானது. கோடீஸ்வரர்களின் பாக்கெட்டுகளில்தான் நாட்டின் செல்வம் அடைபட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களுக்கும், பிரதமர் மோடியின் உத்தரவாதங்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறமாட்டோம் என்பது அவருக்கே நன்கு தெரியும். எங்களுடைய வாக்குறுதி என்பது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கான அரசாக செயல்படுவோம் என்பதே.
பெண்களுக்கு மாதம் ரூ.8,500, இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை, 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக மாற்றுவது போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மட்டுமே காங்கிரஸ் வாக்குறுதியாக தந்துள்ளது.
ஆனால், மோடியின் உத்தரவாதம் என்பது அதானிகளின் ராஜ்ஜியத்துக்கானது. கோடீஸ்வரர்களின் பாக்கெட்டுகளில்தான் நாட்டின் செல்வம் அடைபட்டுள்ளது. அவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஜனநாயகத்தை கேள்விக்கு உள்ளாக்குகின்றனர்.
அதேநேரம், நமது நாட்டின் விவசாயிகள் கையில் பணம் இல்லாமல் வாழ்வாதாரத்துக்காக திண்டாடி வருகின்றனர். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.