கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
ஆளும் பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. காங்கிரசின் இந்த வெற்றியை அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வரும் எதிர் கட்சி தலைவருமான சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் : கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தும் பாஜகவால் வெற்றி பெறமுடியவில்லை. அவர்கள் கர்நாடகத்தில் நடத்திய ‘ரோடு ஷோ’வால் எந்த பலனும் இல்லை.
பா.ஜனதா மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் செய்த ஊழல் வழக்குகள், மதக் கலவரம், வன்முறை போன்றவைகளால் மாநில மக்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் பா.ஜ.க. விற்கு மக்கள் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா யாரு வந்து வாக்கு கேட்டாலும் வெற்றி பெற முடியாது என்பது கர்நாடக மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் வருணா தொகுதியில் என்னை வெற்றி பெற செய்ததற்கு மக்களுக்கும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என அவர் பேசினார்.