பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். ரஜினி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்து வருகிறார்.
மேலும், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தனது முந்தைய படம் தோல்வியை சந்தித்ததால், ஜெயிலர் படத்தை பார்த்து பார்த்து நெல்சன் எடுத்து வருகிறாராம்.
குறிப்பாக, ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில், இந்த படத்தை அவர் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்முறையாக 3 மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் ஒரே படத்தில் நடிக்க உள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.