இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ராகுல் ட்ராவிட். இவருக்கு பிறகு, யார் அந்த பதவியில் இடம்பெறுவார்கள் என்று பல்வேறு யூகங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இந்த லிஸ்டில், முதலில் சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளரும், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் ஃலெமிங்கின் பெயர் அடிப்பட்டது. ஆனால், சில காரணங்களால், அவரால் அந்த பதவியில் அங்கம் வகிக்க முடியாமல் போய்விட்டது.
தற்போது, எம்.எஸ்.தோனியின் பெயர் இடம்பெறுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
அதாவது, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அடுத்து யார்? என்று, BCCI வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவலை வைத்து, இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின் அடிப்படையில், BCCI வட்டாரங்கள் வழங்கிய தகவல்களில், “ஸ்டீபன் ஃலெமிங் அந்த பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. ஒப்பந்தத்தின் பதவிக்காலம் பற்றிய தனது கவலையை தான் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
அவ்வளவு ஏன், ராகுல் ட்ராவிட் கூட ஆரம்பத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதன்பிறகு, அவர் வற்புறுத்தப்பட்டார். ஸ்டீபன் ஃலெமிங் விஷயத்தில், இதே விஷயம் திரும்பி நடந்தால், அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை மற்றும் பயிற்சியாளர் பணியை செய்வதற்கு, தோனியை விட அவர் சிறந்த தேர்வு” என்று கூறப்பட்டுள்ளது.
“தோனி ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிக் கொண்டு இருக்கும்போது, தலைமை பயிற்சியாளர் பணியை செய்வது என்பது சரியான செயலாக இருக்காது. ஆனால், தற்போது அவர் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து வெளியேறி இருப்பதால், அது சரியான செயலாக இருக்க வாய்ப்பு உள்ளது” என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதன்மூலம், ஸ்டீபன் ஃலெமிங் அல்லது எம்.எஸ்.தோனி ஆகிய இரண்டு பேரில் ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.