உத்தபிரதேசம் பிராயக்ராஜ் பகுதியில் கடந்த 14-ஆம் தேதியில் இருந்து, மகா கும்பமேளா தொடங்கியது. மவுனி அமாவாசையை முன்னிட்டு, இன்று புனித நிராடுவதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக, 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்து, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்தில், 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக, தகவல் பரவி வருகிறது. ஆனால், உயிரிழப்புகள் குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “மகா கும்பமேளாவில் நடைபெற்ற விபத்து, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நான் விரும்புகிறேன்.
தங்களால் முடிந்த அனைத்து வழிகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி செய்து வருகிறது. இந்த விபத்து தொடர்பாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் நான் பேசியுள்ளேன்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.