விழுப்புரத்தில் கத்தி முனையில் வீட்டில் புகுந்து 20 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த ஜக்காாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லியோராஜேஷ் என்பவரது மனைவி சித்ராகுமாரி (48) இவர் பாதிராப்புலியூர் அரசு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது மகளுடன் வசித்து வருகின்றார்.

நேற்று இரவு இவர் தனது குடும்பத்தினருடன் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்க்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீட்டின் பின்பக்கமாக உள்ளே புகுந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களிடம் கத்தியை காட்டி சித்ரகுமாரி அணிந்திருந்த 15 பவுன் செயின், கல்லூரி மாணவியான அவரது மகள் கிருத்திகா(22) அணிந்திருந்த செயின் உட்பட 20 சவரன் நகை மற்றும் பீரோவில் இருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் கத்தி முனையில் 20 சவரன் நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைரேகை நிபுணர்கள் செல்வராஜ், சிராஜுதீன் மற்றும் போலீசார் கைரேகை சேகரித்து வருகின்றனர்.

அதேபோல சித்ரா வீட்டு அருகே உள்ள பெயிண்டர் கண்ணதாசன் என்பவர் வீட்டில் பின் பக்கமாக உடைத்து அதிலிருந்து கத்தி போன்ற ஆயுதங்கள் மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்.