என்.எல்.சி. எதிராக பாமக முற்றுகை போராட்டம்: அன்புமணி ராமதாஸ் கைது!

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.

புதன்கிழமை கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே விவசாய நிலங்களை என்.எல்.சி. இந்தியா, நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்கான பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தப்பட்டன. அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிர்கள் அழிக்கப்பட்டன. இதைக் கண்டித்து விவசாயிகள், பாமகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, நெய்வேலியில் இன்று விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தி பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. என்.எல்.சி. தனது நடவடிக்கையைத் தொடர்ந்தால் காலவரையற்ற சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி கூறினார்.

இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தின் இடையே காவல்துறையினரின் வாகனத்தை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் போலீசார் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டினர்.

இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News