சொதப்பியதா வடிவேலுவின் ரீ என்ட்ரி? – நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் முழு விமர்சனம்

இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, சஞ்சனா சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வரும் தம்பதி ஒன்று குழந்தை வரம் வேண்டி பைரவர் கோயிலுக்கு செல்கிறார்கள். அப்போது அங்கு வந்த சித்தர் பெறுவர் அந்த தம்பதிக்கு நாய் ஒன்றை கொடுக்கிறார். அந்த நாய் வந்த நேரம், அவர்களுக்கு ஒரு பக்கம் குழந்தையாக நாய்சேகர் (வடிவேலு) பிறக்கிறார். இன்னொரு பக்கம் செல்வம், புகழ் எல்லாம் வந்து கொட்டுகிறது.

இந்நிலையில் அந்த வீட்டில் வேலைக்காரனாக சேரும் ராவ் ரமேஷ் அந்த நாயை திருடி சென்று அவர் கோடீஸ்வரன் ஆகிவிடுகிறார். இதனால் நாய்சேகரின் குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. இறுதியில் நாய்சேகர் அந்த நாயை மீட்டாரா? இல்லையா என்பதே மீதிக்கதை.

இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வடிவேலு கடந்த 5 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. வடிவேலுவின் கம்பேக் என்ற பெயரில் முந்தைய படங்களில் அவர் பேசி பிரபலமான வசனங்களை அந்தக்காட்சிகளுக்குள்ளே நுழைத்திருக்கிறார்கள்.

வடிவேலு பழைய படங்களில் வரும் அதே டெம்ப்ளேட் பாணியிலேயே இந்த படத்திலும் நடித்துள்ளார். கிங்ஸ்லியும் நடிப்பிலும் பெரிதான எந்த மாற்றமும் இல்லை.

ஷிவானி நாராயணன் இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகளில் வருகிறார். சிவாங்கி சிறிது நேரம் மட்டும் வருகிறார். அவருக்கான காட்சிகள் மிகவும் குறைவுதான்.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.

சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘தலைநகரம்’ ‘மருதமலை’ உள்ளிட்ட படங்களில் வடிவேலுவின் காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைக்கதை மட்டும் சிறப்பாக இருந்திருந்தால் வடிவேலுவின் கம்பேக் படமான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கும்.