பிரபல ஆங்கில நாளிதழின் சார்பில், சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரும், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“என்னுடைய கிரெடிட் கார்டு பில்களை, என்னுடைய மனைவி தான் செலுத்துவார். நாங்கள் இரண்டாவது தலைமுறை தொழில்முனைவோர்களாக உள்ளோம். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆவார்.
இவர், 90-களின் காலகட்டத்தில் பால் சம்பந்தமான நிறுவனத்தை ஆரம்பித்தார். தற்போது, அந்த நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது, என்னுடைய மனைவி பிராமணி தான், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளது. இவர் தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்” என்று கூறினார்.
கடமைகளை கையாளும் விஷயத்தில், தன்னை விட தனது மனைவி சிறந்தவர் என்று ஒப்புக்கொண்ட லோகேஷ், “வேலை மற்றுமு் வாழ்க்கை இடையிலான விஷயங்களை சமநிலையுடன் கையாள்வது குறித்து, என்னுடைய மனைவியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய கற்பனைக்கு அப்பால், அவர் அதனை சிறப்பாக செய்து விடுகிறார்” என்று கூறினார்.
இதற்கிடையே, பள்ளிக் கல்வித்துறையில், பாலின பாகுபாடுகளை உடைப்பது குறித்து பேசிய அமைச்சர், “பாடத்திட்டத்தில், நாங்கள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறோம். வீட்டு வேலைகள் செய்வது தொடர்பான விஷயங்களில் இருந்து ஆரம்பித்திருக்கிறோம்.
பாடப்புத்தகங்களில், வீட்டு வேலைகள் செய்வது அனைவரும் ஏன் பெண்களாக இருக்க வேண்டும்? இந்த ஆண்டில் இருந்து, பாடப்புத்தகத்தில் இடம்பெறும் படங்களில், வீட்டு வேலைகள் செய்வது 50 சதவீதம் ஆணாகவும், 50 சதவீதம் பெண்ணாகவும் மாற்றப்பட உள்ளது. கல்வியில் இருந்து தான் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.