ட்விட்டரில் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. எச்.ராஜா கைது?

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. சர்ச்சைகளுக்கு பெயர் போன இவர், அடிக்கடி மோசமான முறையில் பேசி, பெரும் பிரச்சனையில் சிக்கி வருவது வழக்கம்.

சமீபத்தில் கூட, சென்னை உயர்நீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து கூறிவிட்டு, பின்னர் பிரச்சனை வந்தவுடன், “அதை நான் பேசவில்லை.. யாரோ எனக்கு பதிலாக டப்பிங் செய்துவிட்டார்கள்” என்று கூறி தப்பித்துக் கொண்டார். இவ்வாறு தொடர் சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான இவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது, இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒரு நாள் அதற்கு வெறிபிடித்து மாடு, கன்றுகளைக் கடிக்கத் தொடங்கியது.நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் கல், மூங்கிலால் நாய் தலையில் அடித்தார். இதில் நாய் இறந்தது. இது வருத்தமாக உள்ளது. என்ன செய்வது” என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு தான் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. வாயில்லா ஜீவனை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார் என்றும் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், சமூக ஆர்வலர் ஸ்வப்னா சுந்தர் என்பவர், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள தேசிய விலங்குகள் நல வாரியத்திடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, ஒரு வாரத்திற்குள் பதில் அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு சிவகங்கை ஆட்சியருக்குத் தேசிய விலங்கு நல வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் எச்.ராஜா விரைவில் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.