நயன்தாராவின் ஆவணப்படம் ஒன்று, பிரபல ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், நானும் ரௌடி தான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள், பயன்படுத்தப்பட்டிருந்தது. 3 நொடி கொண்ட இந்த காட்சிகளை பயன்படுத்தியதற்காக, அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதனால், பொங்கியெழுந்த நயன்தாரா, தனுஷை விமர்சித்து, 3 பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நடிகை நயன்தாரா, ஆங்கில YouTube சேனல் ஒன்றிற்கு, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், தனுஷ் உடனான சர்ச்சை குறித்து பேசியுள்ளார். அதாவது, “எனக்கு சரி என்று தெரியும் விஷயத்தை பேச நான் ஏன் பயப்பட வேண்டும்” என்றும், “தவறு செய்தால் தான் நான் பயப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
மேலும், “நான் தனுஷ் உடன் பேசி பிரச்சனையை சரி செய்துக் கொள்ளலாம் என முயற்சி செய்தேன். ஆனால், அதற்கு தனுஷ் வாய்ப்பே தரவில்லை” என்று தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி, “எனக்கு இப்போதும் அவர் மீது மரியாதை உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தனுஷின் செயல் தவறானது தான்” என்று அவர் கூறியுள்ளார்.