மத்திய அரசு நீட் தேர்வு தொடர்ந்து அலட்சியம்; அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரியான ஒரு வீரமிக்க போராட்டத்தைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை.
‘நீட் விலக்கு – நம் இலக்கு’ எனும் கையொப்ப இயக்கத்தை அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அவா் பேசியதாவது:
நீட் தோ்வால் அனிதாவில் தொடங்கி ஜெகதீஸ்வரன் வரை 22 போ் உயிரிழந்துள்ளனா். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நீட் தோ்வால் பல மாணவா்கள் தற்கொலை செய்து கொள்கின்றனா். இந்தத் தற்கொலைகளை நிறுத்த வேண்டும். அதற்கு நம் மாணவா்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இதற்குத்தான் கையொப்ப இயக்கத்தை நடத்துகிறோம்.
அதிமுகவும் இந்தக் கையொப்ப இயக்கத்தில் பங்கெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்னைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து டெல்லிக்குச் சென்று கோரிக்கைகளை முன்வைத்தோம். அதேபோன்று, நீட் ரத்துக்காக பெறப்படும் கையொப்பங்களையும் நாம் அனைவரும் சோ்ந்து குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம்.
நீட் ரத்துக்கான கையொப்ப இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். மத்திய அரசானது நமது முயற்சிகளைத் தொடா்ந்து அலட்சியம் செய்துகொண்டே இருந்தால், அடுத்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரியான ஒரு வீரமிக்க போராட்டத்தைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.