லயோலா கல்லூரி வளாகத்தில் 11-ஆம் ஆண்டு வீதி விருது விழா நேற்று தொடங்கியது. இதில் பல்வேறு இசைக்கலைஞர்கள், தங்கள் இசை வாத்தியங்களை வாசித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது:
திராவிடத்துக்கு என்று கலை உண்டு,. பண்பாடு உண்டு. பல அறிஞா்கள் தங்கள் நூல்களில் சமஸ்கிருதத்தை கொண்ட ஆரியம், தமிழையும், தமிழகத்தையும் கொண்ட திராவிடம் என்ற இரண்டு மட்டுமே இருந்ததாக கூறுகின்றனா்.
இந்த நாடு வேவ்வேறு கலாசாரத்தையும் கொண்டது என அவா்கள் ஒப்பு கொண்டுள்ளனா். இன்று இவை அழிந்து போய் மதம் ஒன்று மட்டுமே தேசியம் என்ற நிலை வந்துள்ளது. இந்த நாட்டுப்புறக்கலைகள் நம் மண்ணோடு தோன்றியவை. மதம் என்றைக்குமே தேசியம் ஆகிவிடமுடியாது. நமது கலைகளை இணைத்த தமிழ் மொழிதான் தேசியமாக முடியும்.
தமிழையும், திராவிடத்தையும் நாட்டுப்புறக்கலைகளால் மட்டுமே காப்பாற்ற முடியும். மதமோ கடவுளோ நம்மை இணைக்காது. நம்மை இணைப்பது மொழி. கலாசாரம் மட்டுமே. நமது மதம் வழிபாட்டு முறையாக மட்டும் இருந்து விட்டு போகட்டும். மனிதனை பிரிக்கும் எந்த கடவுளாக இருந்தாலும் எங்களுக்கு விரோதி தான் என்றாா் அவா்.