தமிழக சட்டப்பேரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைத்து துறைகளின் மீதும், விவாதம் நடைபெற்று வந்தது. சிறைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, சிறைக் கைதிகளின் நலன் காக்கும் வகையில், உணவு முறை மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
குறிப்பாக, காலையில் வழங்கப்படும் கஞ்சி முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக சிறைத்துறை அமைச்சர் ரகுபதி, நிபுணர் குழுவின் அறிக்கையின் படி, கைதிகளின் உணவு மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், கைதிகளின் உணவுமுறை மாற்றம், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை புழல் சிறையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் படி, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் விவரம் பின்வருமாறு:-
காலை :-
புதன்கிழமை – தக்காளி சாதம், முட்டை, தேங்காய் சட்னி
வெள்ளிக்கிழமை – இட்லி, சாம்பார்
ஞாயிற்றுக்கிழமை – கோதுமை உப்புமா, தேங்காய் மற்றும் வேர்கடலை சட்னி
( மேற்குறிப்பிட்ட கிழமைகளில் முன்பு உணவாக வழங்கப்பட்டு வந்த கஞ்சி, முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. காலையில் மட்டும் வழங்கப்பட்டு வந்த தேநீர், இனிமேல் மாலையிலும், சுண்டலுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. )
மதிய உணவு:-
மேலும், மதிய உணவில், கீரை பொறியல், தயிர் சாதம், கார குழம்பு, காய்கறி அவியல், தயிர் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் வழங்கப்பட்டு வந்த கோழிக்கறி, இனிமேல், புதன்கிழமை வழங்கப்பட உள்ளது.
இரவு உணவு:-
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை – சப்பாத்தி, சாதம், சாம்பார், கொண்டை கடலை குருமா ஆகிய உணவுகள் வழங்கப்பட உள்ளன.
( மேற்குறிப்பிட்ட கிழமைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற தினங்களில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களே, கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. )
இந்த புதிய மாற்றத்தின் விளைவாக, ஏ பிரிவு கைதிகளுக்கு, ஒரு நாளைக்கு தலா ஒருவருக்கு, ரூ.207 செலவிடப்படுகிறது. இதேபோல், பி வகுப்பு கைதிகளுக்கு ரூ.135 செலவிடப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த உணவு முறையின் படி, ஏ பிரிவு கைதிகளுக்கு, ரூ.146 செலவிடப்பட்டு வந்தது. இதேபோல், பி வகுப்பு கைதிகளுக்கு ரூ.96 செலவிடப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.