வாகனங்கள் திருடு போய்விட்டால் அதனை கண்டுபிடிப்பது மிகவும் சவாலாக இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு ஏற்பட்டால் கண்டுபிடிப்பது சவாலான காரியம்.
இந்நிலையில் திருடு போன வாகனங்களை கண்டறியும் முயற்சியாக சென்னை மாநகர காவல்துறை புதிய தொழில்நுட்பம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. ரூ.1.8 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு (ஐ.வி.எம்.எஸ்), சென்னை மாநகர காவல்துறையின் பயன்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இதற்காக 28 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. காணாமல் போன வாகன எண் தரவை சேர்த்தால், கண்காணிப்புக் கேமரா அந்த வாகனம் எந்த இடத்தில் கடந்து சென்றாலும் காவல்துறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு உடனடியாக தகவல் வந்து விடும். இதனை கொண்டு வாகனத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போது முதற்கட்டமாக 2021ம் ஆண்டு முதல் காணாமல் போன 3,200 வாகனங்களின் பதிவெண் தரவுகளை சேர்த்து, அவற்றை கண்டுபிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.