கன்னியாகுமரி எம்.பி சீட் வழங்கப்படாமல் இருந்ததில் கடந்த சில தினங்களாகவே அதிருப்தியில் இருந்தார் விஜயதரணி விரைவில் பாஜகவில் இணைவார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் விஜயதரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு சென்று, தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவு-க்கு கடிதம் அனுப்பியிருந்தார்.அதனை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் விஜயதாரணியை தொடர்ந்து திருநாவுக்கரசரும் பாஜக அல்லது அதிமுகவில் இணைவார் என தகவல் பரவி வருகிறது.
சிட்டிங் எம்பியான திருநாவுக்கரசர் கடந்த முறை காங்கிரஸ் சார்பாக திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அதே தொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வந்தார் திருநாவுக்கரசர். ஆனால், அவருக்கு உட்கட்சி அளவில் எதிரான மனநிலைதான் நிலவுகிறது. அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி தொகுதியை மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. தனக்கு சீட் வழங்கப்படாது என்பதை உணர்ந்து கொண்ட திருநாவுக்கரசர், காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜக அல்லது அதிமுகவில் இணைவார் என தகவல் பரவி வருகிறது.