நாம் தமிழர் கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பிற்பகலில் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ், மாநில செயலாளர் சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்தனர்.
என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையிட்டனர்.
முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.