பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுக கட்சியில் இணைந்தனர். இந்த மாற்றம் பாஜகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி பலரும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை. எங்களை திட்டமிட்டு பிரிக்க நினைக்கின்றனர்.ஒற்றுமையாக செயல்பட்டு எங்கள் கூட்டணியை வெற்றிபெற செய்வோம் என தெரிவித்தார்.