கடவுள் இல்லை-னு சொல்றான் பாரு அவன நம்பு, கடவுள் இருக்கு-னு சொல்றான் பாரு அவனையும் நம்பு, ஆனா நான் தான் கடவுள்-னு சொல்றான் பாரு, அவன மட்டும் நம்பிடாத என்று, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற கமல் படத்தில் வசனம் ஒன்று இடம்பெற்றிருக்கும்.
இந்த வசனத்தை உண்மையாக்கும் வகையில், இந்தியாவில் உள்ள பல்வேறு போலி சாமியார்கள், தங்களை தாங்களே கடவுள் என்று அறிவித்துக் கொள்கிறார்கள். மேலும், கடவுளின் புதிய அவதாரம் என்றும் கூறிக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில், தன்னை தானே கடவுள் என்று அறிவித்துக் கொண்ட சாமியார் போலே பாபா, சாத்சாங் என்ற நிகழ்வை நடத்த வருகை தந்திருந்தார்.
அப்போது, அங்கு குவிந்திருந்த அவரது பக்தர்கள், பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்கு ஓட முயற்சி செய்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 121 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையே கிளப்பியிருந்தது. இந்நிலையில், போலே பாபா, பி.டி.ஐ என்ற செய்தி ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், என்ன நடக்க வேண்டும் என்பதை, யாராலும் தவிர்க்க முடியாது என்றும், அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஹத்ராஸ் சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.