தாம்பரம் அருகே மழையினால் தாமதமாக வந்ததால் பள்ளிக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம்

தாம்பரம் அருகே மழையினால் இரண்டு நிமிடம் தாமதமாக பள்ளிக்கு வந்ததாக கூறி மாணவர்களை உள்ளே அனுமதிக்காததால் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கொட்டும் மழையில் பெற்றோர்கள் ,ஆசிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் உள்ள என்.எஸ்.என் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளி உள்ளது. இங்கு ப்ரீ.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்தது.
இதனால் சிட்லபாக்கம் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக என்.எஸ்.என் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி படித்து வரும் சுமார் 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு வந்தடைய 5 நிமிடம் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களை பள்ளி வளாகத்தின் உள்ளே அனுமதிக்காத நிர்வாகம் அவர்களை கொட்டும் மழையில் பெற்றோர்களுடன் சுமார் மூன்று மணி நேரமாக நிற்க வைத்துள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார் பள்ளி நிர்வாகர்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்ததால் மேலும் பரபரப்பானது.

பின்பு தகவல் அறிந்து வந்த தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து மாணவர்கள் உள்ளே அனுமதிக்கபட்டனர்.