பிரபல நடிகை விஜயலட்சுமியை, திருமணம் செய்துக் கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தொடரப்பட்டது. இந்த புகார் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், அவரது வீட்டின் கேட்டில் ஒட்டப்பட்டிருந்த சம்மனை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கிழித்துள்ளார். இதனால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு, காவல்துறையினர், சீமானின் வீட்டிற்கு சென்று, அந்த நபர் குறித்து விசாரணை நடத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால், அப்போது அங்கிருந்த சீமான் வீட்டு காவலாளி, காவலர்களை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், துப்பாக்கியை காட்டி காவல்துறையினரை மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த காவலாளியையும், சம்மனை கிழித்த நா.த.க. நிர்வாகியையும், காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.