கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்களும், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், ரயிலில் பயணித்த 280-க்கும் மேற்பட்டோர், பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விபத்தில், உயிரிழந்த மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு, அரசு சார்பில், நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்த பிஜெய் பட்டா என்பவர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில், “நானும் என் மனைவி கீதாஞ்சலி என்பவரும், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே, பிரிந்துவிட்டோம். தற்போது, நாங்கள் இருவரும் ஒன்றாக வாழவில்லை. ஆனால், ஒடிசா ரயில் விபத்தில், நான் உயிரிழந்துவிட்டதாக கூறி, என் மனைவி நிவாரணத் தொகையை பெறுவதற்காக, முயற்சித்து வருகிறார்.
அடையாளம் தெரியாத பிணத்தை காட்டி, இவ்வாறு செய்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத சடலத்தை, தன்னுடைய கணவர் என்று கூறி, நிவாரணத் தொகையை பெற பெண் முயற்சித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.