2025-ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த 6-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று, வலியுறுத்தினார்.
ஆனால், தேசிய கீதத்திற்கு பதிலாக, தமிழ்த்தாய் வாழ்த்து தான், சட்டப்பேரவையில் பாடப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர், உரையாற்றாமல், அவையில் இருந்து வெளியேறினார்.
இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், அதன் கூட்டணி கட்சியினரும், தங்களது கண்டனங்களை ஆளுநருக்கு தெரிவித்தனர்.
இவ்வாறு இருக்க, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், கூறியிருப்பது பின்வருமாறு:-
“திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் “அபத்தமானது” மற்றும் “சிறுபிள்ளைத்தனமானது” என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல.
பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.