பொதுமக்கள் நலன் கருதி ஆம்னி பேருந்துகளின் 5 சதவீத கட்டண குறைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை எழிலகத்தில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டம் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் ஆம்னி பேருந்துக்கு கட்டண நிர்ணயம் இல்லாததால், வாடகைக்கு கார்களை ஒப்பந்த முறையில் எடுத்துச் செல்வதுபோலதான் ஆம்னி பேருந்துகளும் இயங்கி வருகின்றன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கூட்டம் நடத்தப்பட்டு, கட்டண குறைப்பு செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டிருந்தோம். அதன்படி, அவர்கள் நிர்ணயித்திருந்த கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் குறைத்து அறிவித்தனர். எவ்வித புகாருக்கும் இடமின்றி ஆம்னி பேருந்துகளை இயக்கினர். பொங்கல் பண்டிகையின்போதும் புகாரின்றி ஆம்னி பேருந்துகளை இயக்கி உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி கட்டண குறைப்பு செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளோம். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு ஒருமித்த முடிவாக 5 சதவீத கட்டண குறைப்பு செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு குறைத்த 25 சதவீதத்துடன் மேலும் 5 சதவீதம் கட்டணத்தை குறைத்து ஆம்னி பேருந்துகளை இயக்குவதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும், போக்குவரத்து காவல்துறையின் அறிவுறுத்தலான 100 அடி சாலையில் பேருந்துகளை இயக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளையும் செயல்படுத்த உள்ளனர்.
கடந்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின்போது எப்படி கட்டண உயர்வின்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதோ, அதேபோல் இந்த ஆண்டும் இயக்கவுள்ளனர். இந்த கட்டண குறைப்பை அவர்களது இணையதளத்தில் விரைவில் வெளியிடுவர். கடந்த 2 மாதங்களில் சிலர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தனர். அவர்களுக்கும் தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் காவல்துறை சார்பிலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் கூட்டம் நடத்தி அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.