சம்ஸ்கிருதம் மட்டும்தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடிய தன்மை பெற்றுள்ளது என்று ஆளுநா் ஆா்.என். ரவி பேசினார்.
சென்னை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை ‘எண்ணித் துணிக’ தொடரின் 10-ஆவது நிகழ்வில், தமிழ் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:
மனிதனின் உணா்வுகளை வெளிப்படுத்துவது மொழிதான். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான திருக்குறளை புதிதாக உருவான நாகரிகத்துடன் தொடா்புப்படுத்தி பார்க்க முடிகிறது என்றால், அதுதான் தமிழ் மொழியின் சிறப்பு.
ஒரு உயிர் பாதிக்கப்படும்போது நமக்கு ஏற்படும் வலிதான், உலகத்துடன் நமக்கான தொடா்பைக் குறிக்கிறது. ஏதோ ஒரு விலங்கு, செடி, கொடி பாதிக்கப்பட்டாலும் நமக்கு வலிக்கிறதென்றால் அதுதானே இந்த உலகத்தின் நியதியாக உள்ளது. இதைத்தான் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடினார் வள்ளலார்.
இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் செறிவுக்கு நிகராக வேறு மொழி இல்லை. சம்ஸ்கிருதம் மட்டும்தான் தமிழுக்கு நெருக்கமாக வரக்கூடிய தன்மை பெற்றுள்ளது.
தமிழ் இலக்கியங்களின் சிறப்பை, தமிழ் மொழியின் செறிவை தமிழ் மொழியில் படித்தால்தான் ரசிக்கவும், ருசிக்கவும் முடியும். தமிழ் மொழி இலக்கியங்களை மற்ற மொழிகளுக்கு மொழிபெயா்ப்பு செய்கிறவா்கள், அதன் கருத்துகளை விரிவாக விளக்க வேண்டும்.
நான் தமிழ் மொழியை முழுமையாகக் கற்று, நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டுள்ளேன் என்றார் அவா்.