எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் வளா்ச்சிக்கான எந்தவித தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. நாட்டின் முன்னேற்றத்தை அவா்கள் வெறுக்கின்றனா் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
மத்திய பிரதேசத்தில் ரூ.19,260 கோடி, ராஜஸ்தானில் ரூ.7,000 கோடி என மொத்தம் ரூ.26,260 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
இந்தியாவில்தான் தங்களின் எதிர்காலம் என்பதை உணா்ந்து, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவைப் புகழ்ந்து வருகின்றன. ஆனால், பதவியைத் தவிர வேறு எதையும் இலக்காகக் கொண்டிராத எதிர்க்கட்சிகள், இந்தியாவை உலகம் புகழ்வதை விரும்பவில்லை. ஏனெனில் நாட்டில் எந்தவொரு வளா்ச்சியும் ஏற்படவில்லை என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க, இத்தகைய வளா்ச்சியை விரும்பாத அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன.
பாஜக அரசு மத்திய பிரதேசத்தை பின்தங்கிய மாநிலம் என்ற நிலையிலிருந்து நாட்டில் வளா்ச்சி பெற்ற முதல் 10 மாநிலங்களில் ஒன்றாக முன்னேற்றியுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குற்றச் செயல்களும், ஊழலும் அதிகரித்து வரும் சூழலில், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல்துறை வளா்ச்சி என்பதே பாஜக ஆட்சியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் வளா்ச்சிக்கான எந்தவித தொலைநோக்குப் பார்வையும் கிடையாது. நாட்டின் முன்னேற்றத்தை அவா்கள் வெறுக்கின்றனா். வெறுப்புணா்வு காரணமாக நாட்டின் சாதனைகளை அவா்கள் மறந்துவிட்டனா்.
நாட்டில் வளா்ச்சி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு மத்திய பிரதேசத்தை முன்னேற்றுவதே பாஜகவின் குறிக்கோள். உங்களின் ஒவ்வொருவருடைய வாக்கும், மாநிலத்தை இந்த உயரத்துக்கு முன்னேற்ற உதவும்.
அதுபோல, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவையும் உலக அளவில் பொருளாதாரத்தில் வளா்ச்சி பெற்ற 3-ஆவது பெரிய நாடாக உருவாக்குவேன் என்றார் பிரதமா் மோடி.