Connect with us

Raj News Tamil

பாஜகவின் தேர்தல் அறிக்கை.. பிரித்து மேய்ந்த எதிர்கட்சியினர்..

இந்தியா

பாஜகவின் தேர்தல் அறிக்கை.. பிரித்து மேய்ந்த எதிர்கட்சியினர்..

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜகவின் முக்கிய தலைவர்களான, பிரதமர் நரேந்திர மோடி, ஜே.பி.நட்டா, அமித் ஷா ஆகியோர், இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த தேர்தல் அறிக்கையில், ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்த தேர்தல் அறிக்கையை , எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர்.

சுப்ரியா ஸ்ரீநாத்:-

அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், இது ஒரு வெற்று ஆவணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிஷி:-

இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் கல்வித்துறை அமைச்சருமான அதிஷி, பாஜவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

“இன்று, பாஜக தங்களது தேர்தல் அறிக்கையை நாட்டுக்கு அளித்துள்ளது. 10 வருடங்களாக ஆட்சியை நடத்தி வந்தபோதிலும், தங்களது வாக்குறுதிகளில், ஒன்றை கூட பாஜக நிறைவேற்றவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்கள். ஆனால், வரலாற்றில் இல்லாத அளவுக்கு, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அதிஷி, “டெல்லியின் மக்கள் நல் வாழ்வுத்துறையின் பட்ஜெட்டை காட்டிலும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு குறைவான அளவே நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூபாய் 9000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், ஒட்டுமொத்த நாட்டுக்குமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு, வெறும் 8 ஆயிரம் கோடி ரூபாய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ்:-

இதே போல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார்.

“இளைஞர்கள் பற்றி எந்தவொரு அறிவிப்பும், தேர்தல் அறிக்கையில் இல்லை. இந்தியாவில் 80 சதவீதம் விவசாயிகள் தான் உள்ளனர்.

ஆனால், அவர்களை பற்றியும் இல்லை. வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது தொடர்பாக, எந்தவொரு விஷயமும், தேர்தல் அறிக்கையில் விவாதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “பீகார் மாதிரியான ஏழ்மையான மாநிலங்களை முன்னேற்றுவதற்கு ஏற்ற வாக்குறுதிகள், அந்த தேர்தல் அறிக்கையில் இல்லை. ஏழ்மையை ஒழிப்பது தொடர்பாகவும், பணவீக்கத்தை குறைப்பது தொடர்பாகவும், அந்த அறிக்கையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாஜகவினர் என்ன சொன்னார்கள் என்பதும், 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதும், எல்லோருக்கும் தெரியும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

More in இந்தியா

To Top