நிரூபர்கள், பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் சூர்யா நகரில் உள்ள 86 பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
ஆனால், அதில் 36 பேர்களுக்கு ஏற்கனவே நிலம், வீடு உள்ளது என்று கூறி, அவர்களது பட்டாக்கள் மட்டும், மாவட்ட ஆட்சியரால் ரத்து செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை, பத்திரிகையாளர்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கு, பல்வேறு பத்திரிகையாளர்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும், தமிழக அரசின் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பத்திரிகையாளர்களின் நலன் காப்பதாக தேர்தலில் வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் நலனை கெடுப்பதாக, திமுக அரசின் செயல்பாடுகள் உள்ளது. இதனை பார்க்கும்போது, படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “திமுக அரசின் இந்த செயல்பாடு, பத்திரிகையார்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.