முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தரப்பில் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில் அதிமுக இடைகால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிமுக தோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பரமசிவம் என்பவர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் ஈபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர் ஓட்டினார். அதில் “வெளியேறு வெளியேறு எடப்பாடியே அதிமுக விட்டு வெளியேறு. உனக்கு துதி பாடும் மூளை இல்லாத முட்டாள்களுடன் வெளியேறு” என வாசகம் அடங்கிய போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிமுக அடிமட்ட தொண்டர்களிடையே மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக நகர செயலாளர் துரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்தச் சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் பரபரப்பான சுழல் நிலவி வருகிறது.