அதிமுகவிற்கு வக்காலத்து வாங்கியதற்கு பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் : கோவை செல்வராஜ்

அதிமுகவில் இருந்து விலகி கோவை செல்வராஜ் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த கோவை செல்வராஜ் இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,1971க்கு பிறகு இவ்வளவு நாட்கள் கழித்து தாய்க் கழகத்தில் இணைந்து செயல்பட வாய்ப்பளித்ததற்கு என்னுடைய நன்றியும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி என்ற சுனாமி தமிழக மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்து சென்றது. சீரழிந்த தமிழகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சீர்செய்து மக்களுக்கான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுகவிற்கு வக்காளத்து வாங்கி பேசியதற்கு மக்களிடம் நான் பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் ஒரு வரப்பிரசாதம்.

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது 10 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தற்போது இலவச மின்சாரம் திட்டத்தின் மூலம் ஒன்றரை விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தகுதியே கிடையாது.அதிமுக என்ற கட்சி தற்போது கம்பெனி ஆகி விட்டது. கோவை மாவட்டத்தை சேர்ந்த என்னுடைய ஆதரவாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் விரைவில் திமுகவில் இணையவுள்ளோம் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.