Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

ஏழை நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை: பிரதமர் மோடி!

இந்தியா

ஏழை நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை: பிரதமர் மோடி!

ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று (ஜூன் 6) நடைபெற்றது. கூட்டத்தில், நாடாளுமன்றக் குழு தலைவராக, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை ராஜ்நாத் முன்மொழிய, அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் அதனை வழிமொழிய, ஒருமித்த குரலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக அனைவரும் ஒருமனதாக என்னை தேர்வு செய்ததிருக்கிறீர்கள். நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு புதிய பொறுப்பை வழங்கியுள்ளீர்கள். நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

கடந்த 2019-ல் இந்த சபையில் நீங்கள் அனைவரும் என்னை தலைவராக தேர்ந்தெடுத்தீர்கள். இன்று மீண்டும் இந்த பொறுப்பை எனக்கு வழங்குகிறீர்கள் என்றால், இந்த உறவு வலுவானது என்று அர்த்தம். நம்பிக்கையின் வலுவான அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த உறவுதான் மிகப் பெரிய சொத்து. அரங்கில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும், மாநிலங்களவை எம்.பி.க்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களை இன்று இந்த மைய மண்டபத்தில் இருந்து வணங்குகிறேன்.

இந்தியாவின் மாபெரும் ஜனநாயகத்தின் வலிமை காரணமாக என்டிஏ இன்று 22 மாநிலங்களில் ஆட்சி அமைக்கவும், பணியாற்றவும் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். நம் நாட்டில் 10 மாநிலங்களில் பழங்குடியின சகோதரர்கள் அதிகளவில் உள்ளனர். இந்த 10 மாநிலங்களில் 7-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓர் இயற்கையான கூட்டணி. அடல் பிஹாரி வாஜ்பாய், பிரகாஷ் சிங் பாதல், பாலாசாகேப் தாக்கரே போன்ற தலைசிறந்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நம்பிக்கைக்கு நீர் ஊற்றி, அந்த விதையை நாம் அனைவருக்கும் பலனளிக்கும் ஒன்றாக மாற்றியுள்ளார்கள். அத்தகைய சிறந்த தலைவர்களின் பாரம்பரியத்தை நாங்கள் பெற்றுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதே மதிப்புகளுடன் முன்னேறி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முயன்றுள்ளோம்.

அரசாங்கத்தை நடத்துவதற்கு மக்கள் கொடுத்த பெரும்பான்மையைக் கொண்டு ஒருமித்த கருத்துக்கு பாடுபடுவோம் என்றும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என்றும் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். என்டிஏ சுமார் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது சாதாரண விஷயம் அல்ல. இது மிகவும் வெற்றிகரமான கூட்டணி. என்னை பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் சமம். பல கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்கு அனைவரும் சமம். கடந்த 30 வருடங்களில் என்டிஏ வலுவாகவும் முன்னேறியதற்கும் இதுவே காரணம்.

வாக்குப்பதிவு எந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் இனி சந்தேகம் கொள்ள மாட்டார்கள். நாட்டின் ஜனநாயக செயல்பாட்டில் அவநம்பிக்கை கொள்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். இதுவே இந்திய ஜனநாயகத்தின் பலம். இனியும் வாக்குப்பதிவு எந்திரம் குறித்து சந்தேகம் எழுப்பினால் நாடு அவர்களை மன்னிக்காது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றி என்று உலகமே நம்புகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகும் காங்கிரஸால் 100 இடங்களைக் கூட தொட முடியவில்லை. இண்டியா கூட்டணி மெதுவாக மூழ்கிக்கொண்டிருந்ததை தேர்தலின்போது நான் தெளிவாகக் கண்டேன். இனி அவர்கள் வேகமாக மூழ்குவார்கள்.

இன்றைய சூழ்நிலையில், நாடு தேசிய ஜனநாயக கூட்டணியை மட்டுமே நம்புகிறது என்பதை 2024 தேர்தல் மீண்டும் வலுப்படுத்தி உள்ளது. நாங்கள் பணியாற்றிய 10 வருடங்கள் வெறும் ட்ரெய்லர் என்று நான் முன்பே கூறியிருந்தேன். நாங்கள் வெளியிட்டது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல, அது என்னுடைய அர்ப்பணிப்பு. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரமளிப்பதே எங்கள் முன்னுரிமை. புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா… இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்பதை நான் அறிவேன்.

தென்னிந்தியாவில், புதிய அரசியலுக்கான அடித்தளத்தை என்டிஏ வலுப்படுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் சமீபத்தில்தான் புதிய அரசுகள் அமைந்தன. ஆனால், அந்த மாநிலங்களில் மக்களின் நம்பிக்கை நொடிகளில் உடைந்துவிட்டது. தமிழகத்தில் எங்களால் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதால், அது ஒரு தெளிவான செய்தியை அளிக்கிறது. கேரளாவில் நூற்றுக்கணக்கான நமது தொண்டர்கள் தியாகம் செய்ததன் விளைவாக, முதல் முறையாக அம்மாநிலத்தில் இருந்து ஒரு பிரதிநிதி வந்துள்ளார்.

என்டிஏ எப்போதுமே ஊழலற்ற, சீர்திருத்தம் சார்ந்த, நிலையான அரசை நாட்டுக்கு அளித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயர் மாற்றப்பட்டது. மாறிய பிறகும் நாடு அவர்களை மன்னிக்கவில்லை; நாடு அவர்களை நிராகரித்துவிட்டது. ஒருவரை மட்டும் எதிர்க்கும் இவர்களின் ஒரு முனை நிகழ்ச்சி நிரலால், நாட்டு மக்கள் இவர்களை எதிர்க்கட்சியில் அமர வைத்துள்ளனர் என்று சொல்லலாம்” என்று பிரதமர் மோடி பேசினார்.

More in இந்தியா

To Top