தமிழகத்தில் உள்ள மகளிருக்கு பயன் அளிக்கும் வகையில், பல்வேறு விதமான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்றாக இருப்பது புதுமைப் பெண் திட்டம். அதாவது, 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, உயர் கல்வியில் சேரும்போது, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு மட்டும், இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனை பாராட்டும் விதமாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சரின் ‘புதுமைப் பெண்’ திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று முதலமைச்சரைப் பாராட்டுகிறேன்
உயர் கல்வி படிக்கும் 75,028 மாணவிகள் பயன் பெறுவார்கள் என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது
சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்த முடிவு பல பயன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை” என்று தெரிவித்துள்ளார்.