காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிற்சங்கம் அமைக்க வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 4 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தொழிற் சங்கம் அமைப்பது என்ற கோரிக்கையை தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளுக்கும், சாம்சங் நிறுவனம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது.
ஆனால், அந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை , காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பலரும் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.
தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு!!!” என்று கூறியுள்ளார்.