மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளத்தில் கிராம சபை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் பங்கேற்றாா்.
இந்த கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன் என்பவரும் பொதுமக்களுடன் கலந்து கொண்டார். இந்நிலையில் கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன் கேள்வி எழுப்பியதாக தொிகிறது.இதனால் ஆவேசம் அடைந்த ஊராட்சி மன்ற செயலாளர் தங்க பாண்டியன், உங்களுக்கு இந்த ஊர் கிடையாது. எப்படி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று கூறி அமர்ந்திருந்த விவசாயி அம்மையப்பனை காலால் மார்பில் எட்டி உதைத்தார். ஊராட்சி மன்ற செயலாளருக்கு ஆதரவாக அருகில் இருந்தவரும் விவசாயி கன்னத்தில் அறைந்தார். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கிருந்து அதிகாரிகள் இரண்டு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதனிடையே காயமடைந்த விவசாயி அம்மையப்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.